Thursday, December 25, 2008

கவிதைக்கு காதல் வந்தால்......!

யாரும் அறியாமல்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
"லாலிபாப்" வாங்கி சுவைக்கிறாய்,
எதிர்பாரா என் வருகையால்
சிறிது தடுமாறி,
இயல்பாய் முகத்தை வைக்க முயன்று
பிறகு வீட்டை நோக்கி ஓடுகிறாய்
வெட்கத்தை முதுகிலும் பரவவிட்டபடி..!


ஊரில் விளையாட்டு போட்டி,
ஓட்டப் பந்தயத்தில்
முதலாவதாக ஓடிவந்த
உனது அண்ணனை
நான் முந்தியபோது
உன்னையுமறியாமல்
துள்ளிக்குத்தித்து
மற்றவர்கள் முன்
அசடு வழிந்து நின்றாயே
நினைவிருக்கிறதா..!

என் தங்கை வீட்டில் இல்லாத
நேரமாய் பார்த்து,
அவளைப் பார்ப்பதற்கு வந்ததாக
அம்மாவிடம் சொல்லிக்கொண்டே
என்னை பார்த்து குறும்பாய் சிரிக்கிற
உன்னை என்ன செய்யலாம்....!


பொங்கலன்று நடந்த
கலைநிகழ்ச்சியில்

நடனம்,நாடகம்,கவிதையென
பல பிரிவுகளில்
போட்டிவைத்து

யார்யாருக்கோ
பரிசை வழங்கினார்கள்,

நீ நொடிக்கொருதரம்
என்னை பார்த்து

பார்வையாலே வைத்த
ஜூகல்பந்தியை பாராமல்...!

எனது பிறந்தநாளுக்கு
நீ அனுப்பிய
வாழ்த்து அட்டையை
போஸ்ட்மேனான
உனது அப்பா
என்னிடம் கொடுத்தபோதே
எனக்கு அவரை
'மாமா'வாக்கிவிட்டாய்..!(
ஹி ஹி)

Monday, December 22, 2008

உங்களுக்கு காதல் பிடிக்குமா அப்போ இங்கே வாங்க..

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது நாடகத்தை
பார்த்திருக்கிறாயா..?!

நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!


அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!


உன் அக்காவின் திருமணத்தில்

உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!

”உனக்கு பிடித்த கவிஞர் யார்?” என்றாய்,
உன் அப்பா என்றேன்,
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச்
சிரித்தாயே நினைவிருக்கிறதா?!!

நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு தண்ணீர்
இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!

உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!

ஆளே இல்லாத சாலையிலும்

அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!

கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!

நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!

உன்னை பார்த்துக்

கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடறி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!


அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

கவிதைகளை தனி வலைப் பக்கத்திற்கு நகர்த்திவிட்டதால் அவ்வப்போது பழைய இடுகை தமிழ்மணத்தில் வலம் வரும் ஏற்கனவே படித்தவர்கள் கண்டு கொள்ள வேண்டாம். :))

Friday, November 28, 2008

நொடிக் கவிதைகள்.....!


காத்திருப்பேன் உனது வழியில்,
வந்துவிடடி நெஞ்சமோ வலியில்.!

பேசிக்கொள்ளலாம்,
பேசாமல் கொல்லாதே..!

மனதை இழந்தேன் கள்ளியின்பால்,
நீ இல்லையேல் உள்ளதடி கள்ளியின் பால்..!

உன் பிரிவால் நெஞ்சில் மா ரணம்,
இனியும் தொடர்ந்தால் உறுதி என் மரணம்..!

காதலைச் சொல்லவா ரத்தத்தைச் சிந்தி,
பைத்தியமாய் இருக்கிறேனே கொஞ்சமாவது சிந்தி..!


நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:

கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.

Monday, November 24, 2008

கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!

சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!

மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!

ஒரு கணிப்பொறியாளனின் கனவு:

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடையில்
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி
"வா "என்றாள்,
"எங்கே?" என்றேன்,
"சொன்னால்தான் வருவாயோ?"-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக இங்கே
என்பதாய் பார்த்த என்னிடம்,
"இன்னுமாப் புரியவில்லை?" என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர,
விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!


(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)

டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.

அம்மா..................!

அம்மா
எனக்காகத் துடிக்கும்
இன்னொரு இதயம்..!


அண்ணனுக்கு பதினாறு
வயதிருக்கும்போது
என்னை அடித்தான்,
அம்மா சொன்னாள்,
"அடிக்காதே அவன் சிறுபிள்ளையென்று"
இன்றும் என்னை அடிக்க வருகிறான்
இப்போதும் சொல்கிறாள் அதே வார்த்தைகளை,
இன்று எனக்கு வயது பதினாறு...!


டிஸ்கி:இது நான் பள்ளி நாட்களில் எழுதியது...

Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

Monday, November 17, 2008

என்னை மௌனமாக்கியவள் நீ..!

தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!


பாலில் கலந்த நீரை
பிரித்தறிந்த அன்னத்திடம்,
காதலில் கலந்த நம்மை
எது நீ,எது நானென
பிரித்தறிய சொல் பார்ப்போம்...!

என்னுள் எங்கோ
புதைந்திருந்த காதலுணர்வின்
மௌனத்தை கலைத்து ,
என்னை மௌனமாக்கியவள் நீ..!

மாறாத உண்மைகள் சில கூறு?
வேகமாய் சொல்கிறாய்,
"சூரியன் உதிப்பது கிழக்கு",
"வானின் நிறம் நீலம்",
"தேனின் சுவை இனிப்பு",
இப்படியாக
நீண்ட உன் பட்டியலில்,
நம் காதலும்
சேரும் என்பது
உனக்கேன் தோன்றவில்லை...!

Tuesday, September 16, 2008

உன் தாவணியின் முதல்நாளில்......!

பார்வை படும்
இடத்தில் வளரும்
ஒரு செடியின் அழகு
முதல் பூவைத்
தாங்கும் பொழுது
தெரிவதுபோல ,
பார்த்துப் பழகிய நீ
அழகியானாய்
உன் தாவணியின் முதல்நாளில்......!

இலக்கியத்தில் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்,
அன்னத்திற்கும்,அன்றிலுக்கும்
அவற்றின் இயல்புகளை வைத்து
உருவம் கொடுக்க நினைத்தால் ;
உன் உருவத்திற்கு
இறக்கை முளைக்கிறது.....!

Tuesday, July 29, 2008

காதலைச் சொன்ன கணங்கள்.

பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்.....

எதிர்பாரா
என் வருகையால்,
தடுமாறும்
உன் உரையாடலிலும்....

உன் வீட்டை கடக்கையில்
இல்லாத யாரையாவது
உறக்க விளித்து,
உன் இருத்தலை
அறியத் தரும்போதும்...

என் பெயரைக் கொண்ட
ஜவுளிக் கடையின் பையில்
நீ புத்தகம் சுமந்து வரும்போதும்....

உன் பிறந்த நாளில்,
உன் கையாலேயே
எல்லோருக்கும் இனிப்பு வழங்கி,
எனக்கு மட்டும்
தோழியிடம் கொடுத்து ...
வேண்டுமென்றே
என்னைத் தவிர்த்த போதும்...

அறிந்து கொண்டேன்
என் மீதான உன் காதலை..!

Friday, May 30, 2008

காதல் பள்ளி.................!

மைதானத்தில் படர்ந்திருந்த
நெறிஞ்சி முட்செடியை
களைந்து கொண்டிருந்தேன்,
ஆசிரியர் அனைவரும்
என்னை பாராட்டினர்,
நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்
குத்திக்கொண்டது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...!


உணவு இடைவேளையின்போது,
அவசரமாய் திறந்த டிபன்பாக்ஸ்
காலியாக இருந்ததை கண்டதும்
அதெப்படி சரியாக என்னை பார்த்தாய்..?!


கல்யாணத்திற்குப் பிறகும்,
நான் தலைப்பெழுத்தை
மாற்றிக் கொள்ள மாட்டேனென்று
தோழியிடம் கூறிக்கொண்டே
ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கிறாய்;
எனக்குதான் தெரியுமே,
உன் அப்பாவின் பெயருக்கும்
என் பெயருக்கும்
முதலெழுத்து ஒன்றுதானென்பது...!


பள்ளியில் மேஜிக் ஷோ நடத்தினார்கள்
மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரம் சொல்ல
மாயாமாய் மறைந்தது கைக்குட்டை;
நீ மந்திரமெல்லாம் சொல்லவில்லை
சும்மா ஒருமுறை திரும்பித்தான் பார்த்தாய் ...!



பள்ளிக் காலத்தில்
என்னால் நடப்பட்டு
உன்னால் நீரூட்டப்பட்ட
அந்த சப்போட்டா கன்றில்
காய்க்கும் பழங்கள் மட்டும்
அவ்வளவு ருசியாக இருப்பதாக
இன்றைய மாணவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்;
இருக்காதா பின்னே
காதல் குடித்து வளர்ந்த மரமாயிற்றே...!


இந்த பதிவில் ரொம்பவே சுமாராகத்தான் கவிதைகள்(?!!) இருக்கும்.நீண்ட நாட்களாக ஒரு பதிவும் இடாததால் நண்பர் ஸ்ரீ அவர்கள் ஒரு பதிவு போடும்படி கேட்டுக்கொண்டமைக்காக அவசரமா தோணிணத கிறுக்கியிருக்கேன்.

(யோசித்து எழுதினா மட்டும், நல்லா எழுதிருவியாக்கும்னு நீங்க நினைக்கிறது புரியுதுங்க...)

Thursday, March 27, 2008

உஷார் காதல்...!

காத்திருந்தேன்
 நீ வருவாய் என,
வந்த உடன் கேட்டாய்,
”உன் வருவாய் என்ன?”

Wednesday, March 26, 2008

என்னைப் பற்றி என்ன நினைக்கிற?

சிரிக்கிறாய்
அழகென்றேன்,
சிவக்கிறாளே
என்ன செய்ய..?

”என்னைப் பற்றி என்ன நின்னைகிற?”
என்று கேட்கிறாய்
”என்னைப் பற்றியே ஏன் நினைக்கிற?”
என்று கேள்
சரியாய் இருக்கும்..!

நேற்று யாரோ உன்னைக்
கேலி செய்கையில்
“போடா பொறுக்கி” என்றாய்,
இன்று நான் முத்தம் கேட்கும்போதும்
அதையேச் சொல்கிறாய்
ஆனாலும் எவ்வளவு வித்தியாசம்..!

Monday, March 17, 2008

நொடிக் கவிதைகள்..!


உன்னைப் பிடிச்சிருக்கு
என்னைப் பிடிச்சு இறுக்கு..!

கற்கண்டாய் நீ
உன்னைக் 
கண்டு கல்லாய் நான்..!

நீ எனக்கு பூபாளம்
நானுனக்கு பூபாலம்..!

நமக்குள் வேண்டாம் இனி
நீ, நான் அடையாளம்
எனக்குள் சென்று நீ 
அடை ஆழம்..!

நித்தமும் தெரிகிறாய் புதியதாய்
மொத்தமாய் எனக்கு நீ புதிய தாய்..!

Tuesday, March 11, 2008

பள்ளித் தோழியே....!

பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு
பார்க்கலாமேன்னு.....

பதின்ம வயதின்
பருவ செழிப்பில்;
பார்த்து ரசித்த
பள்ளித் தோழி
நினைவில் பசுமையாய்
எதிரில் பருமனாய்..!
****************************
பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!
****************************
வெட்கமென்றால் என்ன?
எனக் கேட்ட
இன்னொருத் தோழி,
பார்த்த மாத்திரத்தில்
வெட்கப்பட்டாள்,
தன் இரட்டை குழந்தையோடு
சென்றுகொண்டிருக்கையில்..!
*********************************
பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே எதுவுமில்லாததாய்..!

இது காதல் காலமடி...! (பகுதி:4)

நீ
சிலை,
உன்னைப்
பார்த்த கணத்தில்
நானும்..!

எப்போதும் நிழலாய்
தொடர்வதைவிட,

உனக்குள்ளாகவே விழும்
நண்பகல் நிழலாக

நானிருக்க வேண்டும்..!

நித்தமும்
சுத்தம் செய்யப்படும் வீட்டினில்
படிந்துகொண்டே இருக்கும்
தூசியைப் போல,
வேண்டாமென நினைத்தாலும்;
வெகு இயல்பாய்
வந்தமரும் உன் ஞாபகம்..!

என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!

வேறுபட்ட ரசனையுடைய நாம்,
பழகிய சில நாட்களில்,
பிடித்த கவிதையின் சாயல்
என்னையுமறியாமல்
எனது கவிதையில் நுழைவது போல,
உனக்கான ரசனையில்
சிந்திக்க தொடங்கிய கணத்தில்
எனக்குள் நீ வந்திருந்தாய்..!

Thursday, March 6, 2008

காதலாகவே சில கவிதைகள்!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

நீ உண்ணும் போது மட்டுமாவது
உன்னை நினைக்காமலிருக்க
நினைக்கிறேன்,
உனக்கு புரையேறிவிடக்
கூடாதென்பதற்காக!

வான்வெளியைப் பற்றி
ஆராய்ச்சி செய்யுமளவுக்கு
ஞானமிருந்தாலும்,
நீ கேட்கும்,"நிலா பெரியதா?,
நட்சத்திரம் பெரியதா?"
என்பது போன்ற,
குழந்தைத்தனக்
கேள்விக்கெல்லாம்,
தெரியாதென்றே
சொல்லி வைப்பேன்,
"இது கூடத் தெரியாதா?" என்றுக் கூறி,
என்காதைப் பிடித்துத்
திருகுவாயே அதற்காகவே !

என் தங்கையோடு
நானிருந்த புகைப் படத்தை
நேற்று உன்னிடம் காட்டினாளாமே,
அதைக் காணோமென்று
இங்கே தேடிக் கொண்டிருக்கிறாள்
பைத்தியக்காரி!

மார்கழி அதிகாலை
நீ ஈரக்கூந்தலோடு,
கோலமிட்டுக் கொண்டிருக்கிறாய்,
உன் நெற்றியில் ஒதுங்கிய
கற்றைக் முடியில்,
வழிந்து வந்த
ஒற்றைத் துளி நீர்,
நான் காதலை சொல்ல,
தயங்கி நிற்பது போலவே,
கீழே விழலாமா?,வேண்டாமா?
எனத் தயங்கி நிற்கிறது!

Monday, February 4, 2008

குடிகாரன் மகள்!

குடிகாரன் மகள்:
"சொன்னதையே சொல்லும் என்ன?"
கேட்டார் ஆசிரியர்,
சட்டென்று சொன்னாள் சிறுமி,
"அப்பா" என்று!

ஏற்றத் தாழ்வு:
கடும் வறட்சி,
காய்ந்து போன நிலங்கள்,
ஆங்காங்கே பசுமை,
பணக்காரத்தனத்தை பறைசாற்றியபடி
"பம்புசெட்"காரரின் வயல்!







வரப்புகள்:
பூமிப் பெண்ணைக்
கூறு போட்டு,
மானிடர்களால் போடப்பட்டத்
தையல் தழும்புகள்!





மலைகள்:
மேகக் காதலனை,

முத்தமிடக் குவிந்த
பூமிப் பெண்ணின் உதடுகள்!

Friday, February 1, 2008

கலி காலக் காதல்!!

என்னைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாய்,
எனக்குப் புரிந்து போயிற்று
அந்த வார்த்தயை சொல்ல போகிறாயென்று,
பிறிதொரு கணத்தில் சொல்லியும் விட்டாய்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று
மறுத்தேன்,
பிடிவாதமாக இருந்தாய்,
மசிந்தேன்,
பிறகு எங்கெல்லாமோ சுற்றினோம்,
நாட்கள் விரைந்து ஓடியது,
வேறொரு சந்தர்ப்பத்தில்
வெகு இயல்பாய் சொன்னாய்,
"என்னை மறந்துவிடு" என்று,
இதையும் நான் எதிர்பார்த்தேன்
நினைத்தால் தானே மறப்பதற்கு!

Thursday, January 31, 2008

வாடா மலர்!!


அழகு மலர்களுக்கு
ஆயுசைக்
குறைவாகப் படைத்த
பிரம்மன் மீது
கோபம் கொண்டு நிமிர்ந்தேன்,
வாடா மலராய் உன் முகம்
எதிர் வீட்டு ஜன்னலில்,
பிரம்மனின் வித்தைப் புரிந்தது!!

மோகம்.....!

வைகறைப் பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு நீ
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்...!

காக்கா டாக்டரு,காக்கா டாக்டரு.......!


அந்த சம்பவம் நடந்து ரெண்டு மாசத்துக்கப்புறம் இப்போதான் ஊருக்கு வரேன், உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தோடவே வீட்டை நெருங்கினேன்.

இவ்வளவுக்கும் நேத்தே அம்மாகிட்ட இதப் பத்தி கேட்டப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும், நீ பயப்படாம வா" அப்படின்னு சொன்னாங்க,இருந்தாலும் அச்சமாத்தான் இருந்துச்சு.

வீட்டுக்கு பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பார்த்தேன், அங்கே அது இருக்கிற மாதிரி தெரியல, அப்பாடா!மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னயுமறியாமல் அனிச்சயாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடந்த போதுதான் அந்த சத்தம்,

"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு.

எந்த சத்தம் கேட்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதே சத்தம்.

"நீ இன்னுமா மறக்கல"என்று நினைத்தபடியே கைகளை தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டை நோக்கி ஓடினேன்.

வீட்டுக்குள் நுழைந்தும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு.

ஒன்னுமில்லீங்க, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஊருக்கு,விடுமுறையில வந்திருந்தப்போ வீட்டிற்கு முன்னால் இருக்கிற இந்த வேப்ப மரத்து நிழலில் உட்கார்ந்து அன்றைய தினசரியப் புரட்டிக் கிட்டிருந்தேன், அப்போ எதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தேன். பிறந்து ரெண்டு மூனு வாரமே ஆன ஒரு காக்கா குஞ்சு மரத்திலிருந்துக் கீழே விழுந்துத் தத்தளிச்சுக் கிட்டிருந்துச்சு.

ஐயோ பாவம்னு இறக்கப்பட்டு அதை கையில் எடுத்து மீண்டும் அதன் கூட்டிலேயே வைச்சுடலாம்னு எத்தணித்த போதுதான் கவனித்தேன் அதன் காலில் விரல் ஒன்று முறிந்து தொங்கிக்கொண்டிருந்ததை, வாயின் ஒரத்திலும் லேசாக இரத்தம் வழிந்து கொண்டிருந்துச்சு. ரொம்ப கவனமாக கையாண்ட போதும் அந்த முறிந்த விரல் தனியாக கீழே விழுந்துருச்சு.சரி எதாவது முதலுதவி செய்யலாமேன்னு வீட்டுக்குள் கொண்டுவந்தேன்.

"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா, வீட்டுக்குள்ளே கொண்டு வராதே தரித்திரியம்"-அலறினாள் அம்மா.

"போம்மா,இதப் பார்த்தா பாவமா இல்ல"

"இந்த மாதிரி கிறுக்குத் தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாள்.

நான் கொஞ்சம் கூட காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சம் மஞ்சள் தூளை எடுத்து அடிப்பட்ட இடத்திலே தடவி பிறகு ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கையை அதன் முன்னால் தூவினேன்,கழுத்தை சாய்த்து என்னையேப் பார்த்துக் கொண்டிருந்துச்சு.

காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு என் பார்வைக்கும் அப்படிதாங்க தெரிஞ்சது.

இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில் வைத்திருந்து பிறகு ஓரளவுக்கு காயம் ஆறியவுடன் அதை மீண்டும் கூட்டிலேயே வைத்துவிட எண்ணி மரத்திலேறி வைக்க முயன்றபோது,எங்கிருந்துதான் வந்துச்சுன்னே தெரியல ஒரு காக்கா, சற்றும் நான் எதிபாராத தருணத்தில் தன் கால் நகங்களைக் கொண்டு அழுத்தமாக என் தலையில் கீறிட்டுச் போச்சு .

தாய் காகமா இருக்கும் போல,அவசர அவசரமாக காக்கா குஞ்சை கூட்டில் வைத்துவிட்டு நான் இறங்குவதற்குள் மேலும் இருமுறை அதன் தாக்குதலுக்கு ஆளானேன்.

அன்னைக்கு ஆரம்பிச்ச தாக்குதல் வீட்டிலிருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்தது,வீட்டை விட்டு என் தலை வெளியில் தெரிந்தால் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது "மாடார்" ன்னு தலையில் அடிச்சிட்டு போகும்.

அந்த ஒருவாரமும் தலையிலே தொப்பியோடுதான் திரிஞ்சேன். விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவ ஆரம்பிச்சு எல்லாரும் என்னை "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு" ன்னு நக்கல் பண்ண ஆரம்பிசுட்டாங்க.

இது கூட பரவாயில்ல,"என் பணி நக்கல் செய்து கிடப்பதே" ங்கிற மாதிரி ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான், ரொம்ப சாதரணமா எல்லாரையும் நக்கல் பண்ணிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாள் நண்பர்களோடு நின்னு பேசிட்டு இருந்தேன், அந்த சமயம் பாத்து இந்த ஆள் அந்தப் பக்கமா வந்தான்,

"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பார்த்துதான் கேட்டார்.

"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன்.

"நல்ல உத்தியோகமாமே,பயலுவ எல்லாம் பேசிகிட்டாய்ங்க"

"ம்ம்"

"பரவால்லடா,நீ ஒருத்தந்தனாவது,ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கே பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவே புகழ்ந்து பேசினாரு.

அப்படியே உச்சி குளுந்து போயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்புல நின்னுட்ருந்தானுங்க.

"சரி மாப்ள,அப்படியே நேரங்கடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ,கோழி ஒன்னு சொனங்குனாப்ல இருக்கு,நீதான் நல்ல வைத்தியம் பாப்பியாமுல்ல"-ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போயிட்டுருந்தான், கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல உள்ள இத்துணூண்டு வாண்டுங்ககூட,
"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க" -ன்னு சொன்னுச்சுங்க. இப்படி ஆளாளுக்கு அவனுங்க பங்குக்கு வெறுப்பேத்தினாய்ங்க.ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.

அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேல பாக்குற ஊருக்கே போயிட்டேன். அதுக்கு அப்புறமா இப்போதான் வறேன்.

நான் ஓடிவந்தத பார்த்த அம்மா, இன்னுமா அந்த சனிய மறக்கலன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து ,"ஏ சனியனே உன் புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க.என்னவோ அதுக்குப் புரியபோறமாதிரி.

கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.

அப்படியே நகராம நின்னு பார்துகிட்டே இருந்தேன் அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நிற்கும் இடத்திற்கு சற்று தூரத்தில் அமர்ந்து கழுத்தை சாய்த்து என்னையே பார்த்தது, அப்போதுதான் கவனித்தேன் அதன் ஒரு காலில் மூன்றே விரல்தான் இருப்பதை.அதை கண்ட நொடியில் என்னையுமறியாமல் சந்தோஷத்தில் கத்தினேன்,

"அம்மா, இங்கே சீக்கிரமா கொஞ்சம் சாதம் எடுத்துகிட்டு வா!" .

Monday, January 28, 2008

கருவைத் தொலைத்த கவிதை!!

ஏகாந்தத்தின் பிடியில்
தோன்றிய கருவொன்றை
கவிதையாக்க நினைத்து
எழுதி பார்க்கையில்
ஏதோ குறைவதாயுணர்ந்து,
மீண்டும் மீண்டும் யோசித்து
அழகு வார்த்தைகள்
இட்டு நிரப்பி,

எதுகை மோனை சரி செய்து,
வாசித்தப் பொழுது
தொலைந்து போயிருந்தது-கரு!!

Tuesday, January 8, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

புதுமணத் தம்பதியருக்கா,
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!