Thursday, March 27, 2008

உஷார் காதல்...!

காத்திருந்தேன்
 நீ வருவாய் என,
வந்த உடன் கேட்டாய்,
”உன் வருவாய் என்ன?”

Wednesday, March 26, 2008

என்னைப் பற்றி என்ன நினைக்கிற?

சிரிக்கிறாய்
அழகென்றேன்,
சிவக்கிறாளே
என்ன செய்ய..?

”என்னைப் பற்றி என்ன நின்னைகிற?”
என்று கேட்கிறாய்
”என்னைப் பற்றியே ஏன் நினைக்கிற?”
என்று கேள்
சரியாய் இருக்கும்..!

நேற்று யாரோ உன்னைக்
கேலி செய்கையில்
“போடா பொறுக்கி” என்றாய்,
இன்று நான் முத்தம் கேட்கும்போதும்
அதையேச் சொல்கிறாய்
ஆனாலும் எவ்வளவு வித்தியாசம்..!

Monday, March 17, 2008

நொடிக் கவிதைகள்..!


உன்னைப் பிடிச்சிருக்கு
என்னைப் பிடிச்சு இறுக்கு..!

கற்கண்டாய் நீ
உன்னைக் 
கண்டு கல்லாய் நான்..!

நீ எனக்கு பூபாளம்
நானுனக்கு பூபாலம்..!

நமக்குள் வேண்டாம் இனி
நீ, நான் அடையாளம்
எனக்குள் சென்று நீ 
அடை ஆழம்..!

நித்தமும் தெரிகிறாய் புதியதாய்
மொத்தமாய் எனக்கு நீ புதிய தாய்..!

Tuesday, March 11, 2008

பள்ளித் தோழியே....!

பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு
பார்க்கலாமேன்னு.....

பதின்ம வயதின்
பருவ செழிப்பில்;
பார்த்து ரசித்த
பள்ளித் தோழி
நினைவில் பசுமையாய்
எதிரில் பருமனாய்..!
****************************
பாலின வேறுபாடின்றி
பழகிய தோழியொருத்தி,
பார்த்த நொடியில்
பதறி குனிகிறாள்,
"பதி" அருகிருக்கையில்...!
****************************
வெட்கமென்றால் என்ன?
எனக் கேட்ட
இன்னொருத் தோழி,
பார்த்த மாத்திரத்தில்
வெட்கப்பட்டாள்,
தன் இரட்டை குழந்தையோடு
சென்றுகொண்டிருக்கையில்..!
*********************************
பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே எதுவுமில்லாததாய்..!

இது காதல் காலமடி...! (பகுதி:4)

நீ
சிலை,
உன்னைப்
பார்த்த கணத்தில்
நானும்..!

எப்போதும் நிழலாய்
தொடர்வதைவிட,

உனக்குள்ளாகவே விழும்
நண்பகல் நிழலாக

நானிருக்க வேண்டும்..!

நித்தமும்
சுத்தம் செய்யப்படும் வீட்டினில்
படிந்துகொண்டே இருக்கும்
தூசியைப் போல,
வேண்டாமென நினைத்தாலும்;
வெகு இயல்பாய்
வந்தமரும் உன் ஞாபகம்..!

என் கவிதைகளின் முடிவில்
இனி ஆச்சர்யக்குறிக்கு பதிலாக
உன் பெயர்கொண்டு
முடிக்க உத்தேசம்,
எப்போதுமே நீ,
ஆச்சர்யமாய் தெரிவதால்..!

வேறுபட்ட ரசனையுடைய நாம்,
பழகிய சில நாட்களில்,
பிடித்த கவிதையின் சாயல்
என்னையுமறியாமல்
எனது கவிதையில் நுழைவது போல,
உனக்கான ரசனையில்
சிந்திக்க தொடங்கிய கணத்தில்
எனக்குள் நீ வந்திருந்தாய்..!

Thursday, March 6, 2008

காதலாகவே சில கவிதைகள்!

அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

நீ உண்ணும் போது மட்டுமாவது
உன்னை நினைக்காமலிருக்க
நினைக்கிறேன்,
உனக்கு புரையேறிவிடக்
கூடாதென்பதற்காக!

வான்வெளியைப் பற்றி
ஆராய்ச்சி செய்யுமளவுக்கு
ஞானமிருந்தாலும்,
நீ கேட்கும்,"நிலா பெரியதா?,
நட்சத்திரம் பெரியதா?"
என்பது போன்ற,
குழந்தைத்தனக்
கேள்விக்கெல்லாம்,
தெரியாதென்றே
சொல்லி வைப்பேன்,
"இது கூடத் தெரியாதா?" என்றுக் கூறி,
என்காதைப் பிடித்துத்
திருகுவாயே அதற்காகவே !

என் தங்கையோடு
நானிருந்த புகைப் படத்தை
நேற்று உன்னிடம் காட்டினாளாமே,
அதைக் காணோமென்று
இங்கே தேடிக் கொண்டிருக்கிறாள்
பைத்தியக்காரி!

மார்கழி அதிகாலை
நீ ஈரக்கூந்தலோடு,
கோலமிட்டுக் கொண்டிருக்கிறாய்,
உன் நெற்றியில் ஒதுங்கிய
கற்றைக் முடியில்,
வழிந்து வந்த
ஒற்றைத் துளி நீர்,
நான் காதலை சொல்ல,
தயங்கி நிற்பது போலவே,
கீழே விழலாமா?,வேண்டாமா?
எனத் தயங்கி நிற்கிறது!