Friday, November 28, 2008

நொடிக் கவிதைகள்.....!


காத்திருப்பேன் உனது வழியில்,
வந்துவிடடி நெஞ்சமோ வலியில்.!

பேசிக்கொள்ளலாம்,
பேசாமல் கொல்லாதே..!

மனதை இழந்தேன் கள்ளியின்பால்,
நீ இல்லையேல் உள்ளதடி கள்ளியின் பால்..!

உன் பிரிவால் நெஞ்சில் மா ரணம்,
இனியும் தொடர்ந்தால் உறுதி என் மரணம்..!

காதலைச் சொல்லவா ரத்தத்தைச் சிந்தி,
பைத்தியமாய் இருக்கிறேனே கொஞ்சமாவது சிந்தி..!


நொடிக்கவிதைகள் பகுதி 1 இங்கே:

கொசுறு:பெரிதாக ஈர்க்கும் படி இருக்காது.கொஞ்(சு)சம் தமிழில் விளையாடி பார்த்தேன்.

Monday, November 24, 2008

கொஞ்சம் அந்த மாதிரியான கவிதைகள்.....!

சொப்பன சங்கமம்:
பூவாச கூந்தலின் கிறக்கத்தில்
விழித்துக்கொண்ட ஆண்மை,
உச்சிமுகர்ந்து காதுமடல் வருடி,
உதிரமதிர அதரங்கள் சுவைத்து,
சில வளைவு நெளிவுகள் கடந்து
எல்லாம் முடித்(ந்)து களைத்து,
உறங்கி விழிக்கையில்,
எஞ்சியிருக்கும் கலவிச் சோம்பல்
மெல்ல விளங்கவைக்கும்
நேற்றிரவின் சொப்பன சங்கமத்தை,
அனைத்தும் புரிந்த கணத்தில்
அங்கதமாய் கைக்கொட்டிச் சிரிக்கும்
வேறுவழியில்லாத பிரம்மச்சரியம்..!

மோகம் :
வைகறை பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்..!

ஒரு கணிப்பொறியாளனின் கனவு:

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடையில்
தேவதையொருத்தி வந்தாள்,
மெல்ல என் கரம் பற்றி
"வா "என்றாள்,
"எங்கே?" என்றேன்,
"சொன்னால்தான் வருவாயோ?"-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக இங்கே
என்பதாய் பார்த்த என்னிடம்,
"இன்னுமாப் புரியவில்லை?" என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர,
விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!


(சென்ற ஆண்டு ஆகஸ்ட் பூங்கா இதழில் தேர்வாகியிருந்த கவிதை.)

டிஸ்கி : இவை ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான்,ஒரு மீள் பார்வைக்காக.

அம்மா..................!

அம்மா
எனக்காகத் துடிக்கும்
இன்னொரு இதயம்..!


அண்ணனுக்கு பதினாறு
வயதிருக்கும்போது
என்னை அடித்தான்,
அம்மா சொன்னாள்,
"அடிக்காதே அவன் சிறுபிள்ளையென்று"
இன்றும் என்னை அடிக்க வருகிறான்
இப்போதும் சொல்கிறாள் அதே வார்த்தைகளை,
இன்று எனக்கு வயது பதினாறு...!


டிஸ்கி:இது நான் பள்ளி நாட்களில் எழுதியது...

Friday, November 21, 2008

காதல் சொன்ன கணங்கள்...2

எங்கள் வீட்டிற்கு
வழக்கமாய் வந்துபோகும் நீ,
இப்போது வரும்போதெல்லாம்,
யாரும் கேளாமலே
எதையாவது காரணம்
சொல்ல ஆரம்பித்தபோதும்..,

"சிறுவயதிலிருந்தே
ஒன்றாகவேதானே
சுற்றித் திரிவோம்.
இப்போது மட்டும்
ஏன் எல்லோரும் நம்மை
ஒரு மாதிரி பார்க்கிறாங்க?"என்று
இயல்பாய் பார்ப்பவர்கள் மீது
நீ சந்தேகபட்டபோதும்..,

"உங்க அண்ணன் படிக்கிற காலேஜ்ல
பொண்ணுங்களும் படிக்கிறாங்களா?"
என்று என் தங்கையிடம்
நீ கேட்டபோதும்.,

வழக்கம்போல்
சிறுபிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கையில்,
எதிர்பட்ட என்னை பார்த்தததும்
முதன் முதலாய் வெட்கப்பட்டு
வீட்டுக்குள் ஓடிய போதும்..,

என் தங்கையிடம்,
நான் சொன்ன அறிவுரைகளை
அவள் கேட்டாளோ இல்லையோ
அனால் நீ அதன்படி
நடந்து கொண்டபோதும்..,
அறிந்து கொண்டேன்

என்மீதான உன் காதலை...!

Monday, November 17, 2008

என்னை மௌனமாக்கியவள் நீ..!

தன் பிம்பம்
தானென அறியாது,
கண்ணாடியை கொத்தும்
அடைக்கலங் குருவியாய்
உன் பிம்பம்
நானென அறியாது,
என்மேல் கோபப் படுகிறாய்..!


பாலில் கலந்த நீரை
பிரித்தறிந்த அன்னத்திடம்,
காதலில் கலந்த நம்மை
எது நீ,எது நானென
பிரித்தறிய சொல் பார்ப்போம்...!

என்னுள் எங்கோ
புதைந்திருந்த காதலுணர்வின்
மௌனத்தை கலைத்து ,
என்னை மௌனமாக்கியவள் நீ..!

மாறாத உண்மைகள் சில கூறு?
வேகமாய் சொல்கிறாய்,
"சூரியன் உதிப்பது கிழக்கு",
"வானின் நிறம் நீலம்",
"தேனின் சுவை இனிப்பு",
இப்படியாக
நீண்ட உன் பட்டியலில்,
நம் காதலும்
சேரும் என்பது
உனக்கேன் தோன்றவில்லை...!