Friday, December 25, 2009

மதனோற்சவம்

வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!

Thursday, December 24, 2009

நான் என்பவன்...

”பிழைக்கத் தெரியாதவன்”,
”தான்தோன்றி”,
”சொல் பேச்சுக் கேளாதவன்”,
”மறைகழன்றவன்”
என்றே பலவிதங்களில்
வரையறுக்கப்படும்
நான் யாரெனில்
சிறிது பொறுங்கள்
மழை வரும்போலிருக்கிறது
மழைக்கு முன்பான
பூந்தூறல்களில் நனைவது
நினைக்கிறபோதெல்லாம் கிடைக்காது
நனைந்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

Sunday, November 22, 2009

நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

காயச்சண்டிகையின்
வயிற்றையொத்த
கண்களெனக்கு,
உனை எத்தனை முறை
பார்த்தாலும்
என் கண்களின் பசி
அடங்குவதே இல்லை..!

நீண்டதூரம் ஓடிவந்தவனின்
இதயத்தையொத்துத்
துடிக்கும் என் இதயம்
நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கொஞ்சச் சொல்லி
கெஞ்சுகிறதென் காதல்..!

Tuesday, October 13, 2009

கிறுக்கல்கள் 2

ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எதிர் இருக்கை இளமை,
வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விவகாரமாய் உள்விரியும்
அக்காட்சியின் நீட்சிகள்..!

சூழ்நிலையின் தீர்மானங்கள்
நல்லவன்
அயோக்கியன்
குணவான்
முன்கோபி
நண்பன்
துரோகி
அறிவாளி
முட்டாள்
தெய்வம்
சாத்தான்
தைரியசாலி
கோழை
முரடன்
சாது
.....
......

எல்லாமே எல்லோருமே..!

Thursday, October 1, 2009

கிறுக்கல்கள்..

அர்த்தம் புரியாவிட்டாலும்
அழகாய்த்தான் இருக்கின்றன
ஆதர்ஷ கவிஞனின் கவிதையும்
அவளின் சிரிப்பும்..!

***************************
சாலையில் அடிப்பட்ட நாய்மேல்
சகஜமாய் செல்லும் வாகனங்களைப் போல
எதையோப் பார்த்து எதையோக் கேட்டு
எளிதாய் கட்டமைத்து விடுகிறோம்
கொலைச் செயலென்ற பிரஞ்ஞையற்று
அடுத்தவருக்கான பிம்பத்தை...!
******************************

வழக்கமான பேருந்து பயணத்தில்
என்னை ரசிக்கும் அவனின்
இரக்கமற்ற இயல்பான பார்வைக்காகவே
விரும்பியே மறைக்கிறேன் ஊனமான காலை...!

Wednesday, September 16, 2009

அவனுக்கென்ன குடிகாரன்...!

தூசி படிந்த கிச்சன்,
நிறமிழந்த பாத்ரூம் ஸ்டிக்கர் பொட்டு,
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
பிரிக்கப்படா உணவுப் பொட்டலம்,
டீப்பாயில் முளைத்த நெப்போலியன்,
கையில் புகையும் கிங்ஸ்,
எங்கிருந்தோ கேட்குமொரு சேவலின் கூவல்,
உறக்கம் தொலைத்த விழிகளோடு
மூலையில் சுருண்டுகிடக்கும் அவனை
வெளியிலிருந்து பார்க்கும் உங்களுக்கு
வெறும் குடிகாரனாய் தெரியலாம்..!

Thursday, August 20, 2009

நாங்களும் போடுவோம்ல எதிர் கவுஜ

நல்ல சரக்கு இங்கே:

டாஸ்மாக்கில்
கட்டிங் அடிக்கவென்று வருவாய்
உண்மையைச் சொல்
என்றாவது கட்டிங்கோடு
நிறுத்தியிருக்கிறாயா?!

நாம் சேர்ந்து குடிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்
நீ என்னை சும்மா பார்க்க வந்தாலே
”எனக்கும் ஒரு 60” என்கிறார்கள்...!

”சரக்கடிப்பாயா?” என்று
நான் மட்டும் தானே கேட்டேன்
இப்படி ஓவரா போட்டுவிட்டு
ஊருக்கே உளறுகிறாயே..!

அன்றொரு நாள்
நீ டாஸ்மாக்கில்
குவாட்டரோடு கவுந்து கிடந்தாயே
நினைவிருக்கிறதா?
அன்றுதான் நான் ஃபுல் அடித்தும்
சரக்கு பத்தாமல்
புலம்பிக் கொண்டிருந்தேன்..!

வாங்கி வைத்த சைடிஷ்
எங்கேடா காணோமென்று
யாரோ உன்னிடம் கேட்க
நீ என்னை பார்த்தாயே
நினைவிருக்கிறதா?

”உனக்குப் பிடித்த சரக்கு எது?” என்றாய்
”பக்காடி” என்றேன்
”ஹேய் சேம் பிளட்” என்று
துள்ளிக் குதித்தாயே
நினைவிருக்கிறதா..!

நேற்று ஆர்மியில் இருந்து
ஊருக்கு லீவில் வந்த என் தம்பியை
அவன் கேளாமலே
டூவீலரில் ட்ராப் செய்தாயாமே
அவன் உன்னை மெச்சிக்
கொண்டே இருக்கிறான்
தெரியாமல் தான் கேட்கிறேன்
வேறு எவனாவது கெஞ்சினாலும்
நீ லிஃட் கொடுப்பாயா?

உன் வீட்டில்
உன் அண்ணன் தொல்லையென்று
சரக்கை நீ
என் வீட்டில் ஒளித்து வைக்கிறாய்
எதற்கும் எங்க அண்ணனும்
வீட்டில் இருக்கிறானா
என்பதையும் பார்த்துக் கொள்..!

ஆளே இல்லாத சாலையிலும்
நீ சவுண்ட் விடுகிறாய்
அருகே டாஸ்மாக்..!

சரக்கை திறந்துவிட்டு
பொங்கி வருவதை ரசிப்பாய்
உன் வாயில் பொங்கி வருவதை
என்னவென்று சொல்வது..!

குவாட்டரும் ஃபுல்லாகும்
நீ சீக்கிரமே மட்டையாகும் போது..!

டாஸ்மாக்கை பார்த்துக் கொண்டே
வந்த என்னிடம்
எதிரே இருந்த
முனியாண்டி விலாஸில்
சைடிஷ்ஷும் வாங்க சொல்கிறாய்..!

அன்றொரு நாள்
குவாட்டர் அடித்துவிட்டு
ஃபுல் அடித்ததாய் பாவனை செய்தேன்
என்ன செய்கிறாய் என்றாய்
சரக்கடித்தால் அப்படிதான்
செய்வேன் என்றேன்
”நாதாரி உங்க அப்பா வறார்
எங்காவது ஓடி ஒளிந்துகொள்” என்றாயே
நினைவிருக்கிறதா?

பதிவுலக சரித்திரத்தில் நமக்கு நாமே திட்டமாக என் கவிதைக்கு எதிர் கவுஜ நானே போட்டுகிட்டேன்.

Tuesday, July 28, 2009

யதார்த்தம்

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
கண்போது
பிறந்த காதலானது,

என்னில் என்னை நீயும்
உன்னில் உன்னை நானும்
கண்டு கொண்டபோது

அவனிடம் அவளையும்
அவளிடம் அவனையும்
கண்டு கொண்ட ஓர் இடத்திற்கு
தாவியிருந்தது ..!

Monday, July 27, 2009

வலி.....!

தவறான புரிதலிலேயே
சிக்கிக் கொண்டுவிடுகிறோம்
அனேக நேரங்களில்
நானும் எனது கவிதைகளும்,
எனது கவிதைகளை புரிந்துகொள்ள
குறைந்த பட்சம் நானிருக்கிறேன்
என்னை ..... .......?

என்னின் செயல்களை வைத்து
எனக்கான ஒரு பிம்பத்தை
கட்டமைத்து கொண்டாடி மகிழ்ந்தீர்,
நான் நானாகவே இருக்கிறேன்
திட்டமிடப்பட்ட சூழ்ச்சியில்
சிக்கி தடுமாறி நின்ற போது
சூழ்நிலையின் வீரியம் புரியாமல்
உங்கள் கட்டமைப்பில்
ஏதோ குறைவதாய் உணர்ந்து
என் மீது சேற்றை வாறி இறைத்தீர்
பொய்களுக்கு செவிமடுத்திருக்கும் உங்களிடம்
பகீரத பிரயத்தனம்
செய்தும்
ஊமையாகிப் போனோம்

உண்மையும் நானும் ,
உண்மை புரியும் பட்சத்தில்
உங்களின் மனசாட்சி உறுத்தக் கூடும்,
மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்,
வேண்டாம், உண்மை உங்களுக்கு
தெரியாமலே போகட்டும்
நீங்களாவது நிம்மதியாக இருங்கள்...

நான்
தவறாக புரிந்து கொ(ல்ல)ள்ளபட்ட
அக்கணத்திலிருந்தே
உலகை சரியாக
புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

(இது எனக்கு மட்டுமேயான புலம்பல் சும்மா பதிஞ்சு வச்சுக்கிறேன்).



Sunday, July 26, 2009

ஜன்னலோர இருக்கை...

வழக்கமான ரயில் பயணம்,
அடித்துப் பிடித்தாவது
அமர்ந்து விடுகிறேன்
இதே ஜன்னலோர இருக்கையில்,
ஒரு மணிநேர இப்பயணத்தில்
ஓடிவந்து டாட்டா காட்டும்
இரட்டைச் சிறுவர்கள்,
தன் பாட்டியோடு அமர்ந்து
பூ கட்டும் தெற்றுப் பல் சிறுமி,
பார்த்ததும் தலையாட்டும்
பெட்டிக்கடை பெரியவர் என
என்னின் வருகையை
சினேகத்தோடு எதிர் நோக்கும்
அவர்களைப் பாராது
எதையோ இழந்தது போலாகிவிடுகிறது
இவ்விருக்கையை
தவற விடும் நாட்களில் ...!

Monday, July 20, 2009

அனங்கரங்கம்

நிசப்தம்சூழ் தனிமை
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காது
கொடுத்தும் முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க
முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!

(இதன் கருவை கவிதையாக்க பேருதவி புரிந்த வெயிலானுக்கு நன்றி).

Thursday, July 9, 2009

கவிதைகள் மாதிரி சில

4.50 டிக்கெட்டுக்காகக்
கொடுத்த பத்து ரூபாயில்,
ஐம்பது பைசா சில்லறை
போனால் போகட்டும்,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
கண்டக்டரின் பின்னால்
அலையும் இதே மனதுதான்
தொலைதூரப் பயணங்களில்
ஐந்து ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!
=========================
குழந்தையின் காலினின்று
கழன்று விழப்போகும் செருப்பைக்
கவனியாது பயணிக்கும்
டூவீலர் தம்பதியரிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்,
அலுவலகம் வந்த பிறகும்
அதே சிந்தனை..!
==========================
முன் எப்போதோ
தொலைத்தப் பொருளை,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
கிடைக்காதெனத் தெரிந்தும்
அனிச்சையாய் தேடிப் பார்க்கும்
தொலைத்தவனின் கண்கள்..!
=========================
சிகரெட் பிடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
புகையும் 555....!

Thursday, May 7, 2009

இரண்டு கவிதைகளும்,ஒரு தத்துவமும்.

மௌனங்களில்...
மனிதம் கருதி
மௌனிக்கிறேன்,
எனது மௌனங்களின்

மொழிபெயர்ப்புகளில்
இருப்பதில்லை மனிதம்..!

ரகசியங்களின் ரகசியம்:
"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியம்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!


"உன்னைச் சுற்றி பொய்களிருக்க,

நீ பேசும் உண்மை உன்னை பொய்யனாக்கும்".

மேலே இருப்பது இரண்டும் கவிதை (அதான் மடக்கி மடக்கி எழுதி ஆச்சர்யக்குறி போட்டிருக்கோம்ல).

மூன்றாவதாக இருப்பது தத்துவம் :))