Tuesday, July 28, 2009

யதார்த்தம்

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
கண்போது
பிறந்த காதலானது,

என்னில் என்னை நீயும்
உன்னில் உன்னை நானும்
கண்டு கொண்டபோது

அவனிடம் அவளையும்
அவளிடம் அவனையும்
கண்டு கொண்ட ஓர் இடத்திற்கு
தாவியிருந்தது ..!

Monday, July 27, 2009

வலி.....!

தவறான புரிதலிலேயே
சிக்கிக் கொண்டுவிடுகிறோம்
அனேக நேரங்களில்
நானும் எனது கவிதைகளும்,
எனது கவிதைகளை புரிந்துகொள்ள
குறைந்த பட்சம் நானிருக்கிறேன்
என்னை ..... .......?

என்னின் செயல்களை வைத்து
எனக்கான ஒரு பிம்பத்தை
கட்டமைத்து கொண்டாடி மகிழ்ந்தீர்,
நான் நானாகவே இருக்கிறேன்
திட்டமிடப்பட்ட சூழ்ச்சியில்
சிக்கி தடுமாறி நின்ற போது
சூழ்நிலையின் வீரியம் புரியாமல்
உங்கள் கட்டமைப்பில்
ஏதோ குறைவதாய் உணர்ந்து
என் மீது சேற்றை வாறி இறைத்தீர்
பொய்களுக்கு செவிமடுத்திருக்கும் உங்களிடம்
பகீரத பிரயத்தனம்
செய்தும்
ஊமையாகிப் போனோம்

உண்மையும் நானும் ,
உண்மை புரியும் பட்சத்தில்
உங்களின் மனசாட்சி உறுத்தக் கூடும்,
மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்,
வேண்டாம், உண்மை உங்களுக்கு
தெரியாமலே போகட்டும்
நீங்களாவது நிம்மதியாக இருங்கள்...

நான்
தவறாக புரிந்து கொ(ல்ல)ள்ளபட்ட
அக்கணத்திலிருந்தே
உலகை சரியாக
புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

(இது எனக்கு மட்டுமேயான புலம்பல் சும்மா பதிஞ்சு வச்சுக்கிறேன்).Sunday, July 26, 2009

ஜன்னலோர இருக்கை...

வழக்கமான ரயில் பயணம்,
அடித்துப் பிடித்தாவது
அமர்ந்து விடுகிறேன்
இதே ஜன்னலோர இருக்கையில்,
ஒரு மணிநேர இப்பயணத்தில்
ஓடிவந்து டாட்டா காட்டும்
இரட்டைச் சிறுவர்கள்,
தன் பாட்டியோடு அமர்ந்து
பூ கட்டும் தெற்றுப் பல் சிறுமி,
பார்த்ததும் தலையாட்டும்
பெட்டிக்கடை பெரியவர் என
என்னின் வருகையை
சினேகத்தோடு எதிர் நோக்கும்
அவர்களைப் பாராது
எதையோ இழந்தது போலாகிவிடுகிறது
இவ்விருக்கையை
தவற விடும் நாட்களில் ...!

Monday, July 20, 2009

அனங்கரங்கம்

நிசப்தம்சூழ் தனிமை
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காது
கொடுத்தும் முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க
முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!

(இதன் கருவை கவிதையாக்க பேருதவி புரிந்த வெயிலானுக்கு நன்றி).

Thursday, July 9, 2009

கவிதைகள் மாதிரி சில

4.50 டிக்கெட்டுக்காகக்
கொடுத்த பத்து ரூபாயில்,
ஐம்பது பைசா சில்லறை
போனால் போகட்டும்,
ஐந்து ரூபாயாவது
திருப்பித் தருவாரா?
கண்டக்டரின் பின்னால்
அலையும் இதே மனதுதான்
தொலைதூரப் பயணங்களில்
ஐந்து ரூபாயையும்
சில்லறையாக
பாவிக்கப் பழகியிருக்கிறது..!
=========================
குழந்தையின் காலினின்று
கழன்று விழப்போகும் செருப்பைக்
கவனியாது பயணிக்கும்
டூவீலர் தம்பதியரிடம்
சொல்லிவிட்டாவது வந்திருக்கலாம்,
அலுவலகம் வந்த பிறகும்
அதே சிந்தனை..!
==========================
முன் எப்போதோ
தொலைத்தப் பொருளை,
தொலைத்த இடத்தைக்
கடக்கும் போதெல்லாம்,
கிடைக்காதெனத் தெரிந்தும்
அனிச்சையாய் தேடிப் பார்க்கும்
தொலைத்தவனின் கண்கள்..!
=========================
சிகரெட் பிடிக்கும் டீன்ஏஜ் மகன்,
எப்படி அறிவுறுத்தலாமென
யோசிக்கும் தந்தையின் கையில்
புகையும் 555....!