Tuesday, August 28, 2007

அழகு!!!

அச்சம்,மடம்,நாணம் போன்ற
பெண்ணுக்கே உரிய
எதுவும் இல்லை உன்னிடம்,
ஆனாலும் உன்னை எனக்குப்
பிடித்திருந்தது,
வீரம்,கல்வி,கொடை போன்ற
ஆண்மைக்கே உரிய
அத்தனையும் உண்டு என்னிடம்,
ஆனாலும் உனக்கு என்னைப்
பிடிக்கவில்லை,
நான் உன்னை நேசிக்கவும்
நீ என்னை வெறுக்கவும்
இருந்தக் காரணம் ஒன்றே- அழகு!!!

Saturday, August 25, 2007

காதல் ஊர்வலம்!!!

காகத்திற்கு
உணவு வைப்பத்தாய்க் கூறி
"கா..கா.கா...கா" என
விளித்துக் கொண்டே
ஓரக் கண்ணால்
என்னைப் பார்த்துச் சிரிப்பாய் ,
என் நிறத்தை வைத்து
நீ கேலி செய்கிறாய்
என்பது தெரிந்தும்
ரசிப்பேன்!!!!
*************************************
என்னைப் பார்க்கும்
போதெல்லாம் நவரசத்திலும்
இல்லாத ஒரு
பாவனை செய்வாய்
அந்த பத்தாவது ரசத்தின்
பெயர் என்ன?!!
***********************************
உன் வீட்டை
கடக்கும் போதெல்லாம்
உன் குடும்பத்தாருடன் தான் இருப்பாய்
ஆனாலும் யாரும் அறியாமல்
சொல்ல வேண்டியதை
சொல்லி விடுகிறாயே
கள்ளி!
எங்கேயடி கற்றாய்
அந்த வித்தையை?!
********************************

"சுற்றுலாவில் நான் ரசித்தவை"
என்ற தலைப்பில்,
கட்டுரை எழுதச் சொன்னார்கள்
பக்கம் பக்கமாக எழுதினேன்
உன் பெயரை மட்டும்!!!!

Thursday, August 23, 2007

கவிதை வேண்டாமடி

காதலைச் சொல்லக்
கவிதை வேண்டுமாம்,
எழுதிப் பார்த்தேன்
கவிதை வரவில்லை
காகிதக் குப்பைதான் வந்தது,
என் காதலின் ஆழம் புரிய
கவிதை வேண்டாமடி
கசக்கி எறிந்த
காகிதங்களைப் பார் ...!

Tuesday, August 21, 2007

ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடையில்
தேவதையொருத்தி வந்தாள்,

மெல்ல என் கரம் பற்றி
"வா "என்றாள்,
"எங்கே?" என்றேன்,
"சொன்னால்தான் வருவாயோ?"-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக இங்கே
என்பதாய் பார்த்த என்னிடம்,

"இன்னுமாப் புரியவில்லை?" என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர,
விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!

Monday, August 20, 2007

காவேரிக் கரையோரம்!!!

(2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு எழுதியது)
அன்று

பயிர்களின் அறுவடையால்
நிறைந்தன தாழிகள்
இன்று
உயிர்களின் அறுவடையால்
அறுந்தன தாலிகள்!!
*********************************************

அன்று
உணவிற்காகக் கொடுத்தோம்
பலருக்கு
அடைக்கலம்
இன்று
உணவிற்காகப்
பட்டக் கடனை
எப்படி
அடைக்கலாம்!!
************************************************

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!
************************************************

அடுத்த வேளை கஞ்சிக்கு
அண்ணார்ந்துப் பார்த்த
குழந்தையிடம்
"மழை வேண்டி மாரியாத்தாளுக்கு விரதம்
ஒரு வேளைதான்சாப்பிடோனும்"
இல்லாமையால்
சொன்னாள் தாய்!!!
*************************************************
குறிஞ்சியும் ,முல்லையும்
பூத்துக் குலுங்கிய
இந்த மருத நிலத்தில்தான்
பட்டு நெய்தலும்
சிறப்புற்று விளங்கியது
ஆனால் இன்றோ
காவிரி கைவிரித்ததால்

ஆனது பாலை!!!!

Sunday, August 19, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 3)

ஆளே இல்லாத சாலையிலும்
அனிச்சையாய் எழுப்பினேன்
மிதிவண்டி ஒலியை
அருகே உன் வீடு!!
************************************
கோலமிட்டுச் சற்றுத்

தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது!!
*************************************
நிறைகுடமும் கூத்தாடும்

நீ சுமந்து வருகையில்!!!
*************************************
உன்னைப்

பார்த்துக்கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடரி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்!!

Friday, August 17, 2007

சந்தர்ப்பங்களில்.....!!!

தீடீர் மழை,
நனைந்து களிக்கும் சிறுவர்,
ஓடி ஒதுங்கும் மக்கள்,
சேர்ந்தே ஒதுங்குகிறேன் ,
சந்தர்ப்பங்களில்
இப்படித்தான்
நடிக்க வேண்டியுள்ளது..!


Thursday, August 16, 2007

இது காதல் காலமடி!!!(பகுதி 2)

அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொன்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது!!

******************************************
உன் அக்காவின் திருமணத்தில்
உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!
*********************************************

உனக்குப் பிடித்தக்
கவிஞர் யார் என்றாய்,
உன் அப்பா என்றேன்
புரியாமல்ப் பார்த்து
பிறகு
வெட்கப்பட்டுச் சிரித்தாயே
நினைவிருக்கிறதா?!!

**********************************************
நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு
நீர் இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா?!!!!!
******************************************
உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும்
இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு!!!
************************************************

இது காதல் காலமடி!!!!(பகுதி1)

கார்த்திகைப் பெருநாளன்று
தீபம் ஏற்றிக் கொண்டிருக்கிறாய் ,
ஏன் குனிந்து நிமிர்ந்து
இவ்வளவு சிரமப்படுகிறாய்
பேசாமல் நீயே வந்து
வாசலில் அமர்ந்து விடேன்!!!
(இதே போன்ற ஒரு கவிதை தபு சங்கரின் கவிதை தொகுப்பிலும் இருக்கிறது,இது எதார்த்தமாய் அமைந்ததா இல்லை அதை நான் முன் எங்கேயாவது படித்து அதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.)
*******************************************
பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்

நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்
உண்மையைச் சொல்
என்றைக்காவது நாடகத்தைப்
பார்த்திருக்கிறாயா?!
*******************************************
நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையேப் பார்க்கிறார்கள்!!
**********************************************
உன் வயதை
நான் மட்டும்
தானேக் கேட்டேன்
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே!!!!

கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடை அணிந்த
ஒரு தேவதை வந்தாள்
மெல்ல என் கரம் பற்றி
வா என்றாள்,
எங்கே என்றேன்,
சொன்னால்தான் வருவாயோ?-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள்
எதற்காக என்னை
இங்கே அழைத்து வந்தாய்-என்றேன்,
இன்னுமாப் புரியவில்லை என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்
விரகத்தில் தவித்த உதடுகளையும்
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கயில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர
விட்ட இடத்திலிருந்துக்
கனவைத் தொடர முயற்சித்தேன்
முடியவில்லை
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!!