Monday, April 12, 2010

கிறுக்கல்கள் 3

அழுக்கு ஜன்னல்களுக்கான மவுசு
அலங்கார வாசற்கதவுகளுக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அழகான பெண்களிருக்கும் வீடுகளில்...!

@@@@@@@@@@@@@@@@@@

நடுநிசி தாண்டி நீளும்
அலைபேசி உரையாடல்களில்
அடுத்தென்ன பேசுவதெனப் புரியாது
இடையிடையே நிலவும்
சிலநொடி பெருமௌனங்களிலெல்லாம்
பிறகு பேசலாமென
அழைப்பைத் துண்டிக்க நினைப்பேன்
`அப்புறம் சொல்லுங்க` என்று
மீண்டும் ஆரம்பிப்பாயே
அதில்தானடி ஒளிந்திருக்கிறது
அடர்த்தியாய் நம் காதல்..!

@@@@@@@@@@@@@@@@@@

அலைபேசியில் யாரோடோ
கொஞ்சிப் பேசியபடி வரும்
பின்னிருக்கை வசிகரக்குரலியைத்
திரும்பிப் பார்க்கச் சொல்லி
அடம்பிடிக்கும் மனதை
நாகரிகம் கருதி அடக்குகிறேன்,
தொடர்ந்து கேட்கும்
அக்கொஞ்சல் மொழியில்
தொலையாத ஏதோ ஒன்றைத்
தொலைத்ததாய் தேடும் பாவனையில்
என் நிறுத்தம் வருமுன்
அவளைப் பார்த்துவிட்டே இறங்குகிறேன்
ஜென்மம் ஈடேரியதொரு திருப்தியோடு..!