Friday, May 30, 2008

காதல் பள்ளி.................!

மைதானத்தில் படர்ந்திருந்த
நெறிஞ்சி முட்செடியை
களைந்து கொண்டிருந்தேன்,
ஆசிரியர் அனைவரும்
என்னை பாராட்டினர்,
நேற்று நீ நெறிஞ்சி முள்ளைக்
குத்திக்கொண்டது அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை...!


உணவு இடைவேளையின்போது,
அவசரமாய் திறந்த டிபன்பாக்ஸ்
காலியாக இருந்ததை கண்டதும்
அதெப்படி சரியாக என்னை பார்த்தாய்..?!


கல்யாணத்திற்குப் பிறகும்,
நான் தலைப்பெழுத்தை
மாற்றிக் கொள்ள மாட்டேனென்று
தோழியிடம் கூறிக்கொண்டே
ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கிறாய்;
எனக்குதான் தெரியுமே,
உன் அப்பாவின் பெயருக்கும்
என் பெயருக்கும்
முதலெழுத்து ஒன்றுதானென்பது...!


பள்ளியில் மேஜிக் ஷோ நடத்தினார்கள்
மேஜிக் நிபுணர் ஏதோ மந்திரம் சொல்ல
மாயாமாய் மறைந்தது கைக்குட்டை;
நீ மந்திரமெல்லாம் சொல்லவில்லை
சும்மா ஒருமுறை திரும்பித்தான் பார்த்தாய் ...!



பள்ளிக் காலத்தில்
என்னால் நடப்பட்டு
உன்னால் நீரூட்டப்பட்ட
அந்த சப்போட்டா கன்றில்
காய்க்கும் பழங்கள் மட்டும்
அவ்வளவு ருசியாக இருப்பதாக
இன்றைய மாணவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்;
இருக்காதா பின்னே
காதல் குடித்து வளர்ந்த மரமாயிற்றே...!


இந்த பதிவில் ரொம்பவே சுமாராகத்தான் கவிதைகள்(?!!) இருக்கும்.நீண்ட நாட்களாக ஒரு பதிவும் இடாததால் நண்பர் ஸ்ரீ அவர்கள் ஒரு பதிவு போடும்படி கேட்டுக்கொண்டமைக்காக அவசரமா தோணிணத கிறுக்கியிருக்கேன்.

(யோசித்து எழுதினா மட்டும், நல்லா எழுதிருவியாக்கும்னு நீங்க நினைக்கிறது புரியுதுங்க...)