Thursday, December 25, 2008

கவிதைக்கு காதல் வந்தால்......!

யாரும் அறியாமல்
பக்கத்து வீட்டு குழந்தையிடம்
"லாலிபாப்" வாங்கி சுவைக்கிறாய்,
எதிர்பாரா என் வருகையால்
சிறிது தடுமாறி,
இயல்பாய் முகத்தை வைக்க முயன்று
பிறகு வீட்டை நோக்கி ஓடுகிறாய்
வெட்கத்தை முதுகிலும் பரவவிட்டபடி..!


ஊரில் விளையாட்டு போட்டி,
ஓட்டப் பந்தயத்தில்
முதலாவதாக ஓடிவந்த
உனது அண்ணனை
நான் முந்தியபோது
உன்னையுமறியாமல்
துள்ளிக்குத்தித்து
மற்றவர்கள் முன்
அசடு வழிந்து நின்றாயே
நினைவிருக்கிறதா..!

என் தங்கை வீட்டில் இல்லாத
நேரமாய் பார்த்து,
அவளைப் பார்ப்பதற்கு வந்ததாக
அம்மாவிடம் சொல்லிக்கொண்டே
என்னை பார்த்து குறும்பாய் சிரிக்கிற
உன்னை என்ன செய்யலாம்....!


பொங்கலன்று நடந்த
கலைநிகழ்ச்சியில்

நடனம்,நாடகம்,கவிதையென
பல பிரிவுகளில்
போட்டிவைத்து

யார்யாருக்கோ
பரிசை வழங்கினார்கள்,

நீ நொடிக்கொருதரம்
என்னை பார்த்து

பார்வையாலே வைத்த
ஜூகல்பந்தியை பாராமல்...!

எனது பிறந்தநாளுக்கு
நீ அனுப்பிய
வாழ்த்து அட்டையை
போஸ்ட்மேனான
உனது அப்பா
என்னிடம் கொடுத்தபோதே
எனக்கு அவரை
'மாமா'வாக்கிவிட்டாய்..!(
ஹி ஹி)

Monday, December 22, 2008

உங்களுக்கு காதல் பிடிக்குமா அப்போ இங்கே வாங்க..

பஞ்சாயத்துத் தொலைக்காட்சியில்
நாடகம் பார்ப்பதெற்கென வருவாய்,
உண்மையைச் சொல்,
என்றைக்காவது நாடகத்தை
பார்த்திருக்கிறாயா..?!

நாம் காதலிப்பது
எல்லோருக்கும்
தெரிந்து விட்டது போலும்,
நீ என்னைக் கடந்து போகயில்
எல்லோரும்
என்னையே பார்க்கிறார்கள்..!

உன் வயதை
நான் மட்டும் தானே கேட்டேன்,
இன்று முதன் முதலாக
ஓட்டு போட வந்து
ஊருக்கேச் சொல்லி விட்டாயே..!


அன்றொருநாள்
உன் தாவணி
மிதிவண்டிச் சக்கரத்தில்
சிக்கிக் கொண்டதே
நினைவிருக்கிறதா,
அன்றுதான் என் மனது
உன் தாவணியில் சிக்கியது...!


உன் அக்காவின் திருமணத்தில்

உன் திருமணம் எப்போவென
யாரோ கேட்டதற்கு
நீ என்னைப் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?!

”உனக்கு பிடித்த கவிஞர் யார்?” என்றாய்,
உன் அப்பா என்றேன்,
புரியாமல் பார்த்து
பிறகு வெட்கப்பட்டுச்
சிரித்தாயே நினைவிருக்கிறதா?!!

நேற்று ஊர் கிணற்றில்
என் அம்மாவிற்கு தண்ணீர்
இறைத்துத் தந்தாயாமே
அம்மா உன்னை
மெச்சிக் கொண்டே இருந்தாள்
தெரியாமல்தான் கேட்கிறேன்
வேறு யாரேனும் கேட்டிருந்தால்
நீர் இறைத்துத் தருவாயா..?!

உன் வீட்டில்
எறும்புத் தொல்லை
அதிகமென்று
சர்க்கரை டப்பாவைச் சுற்றி
பூச்சி மருந்தைத்
தூவி வைத்திருக்கிறாய்
எதற்கும்
நீ படுக்கும் இடத்தைச் சுற்றியும்
அப்படியே செய்துவிடு..!

ஆளே இல்லாத சாலையிலும்

அனிச்சையாய் அடிக்கிறேன்
சைக்கிள் பெல்லை
அருகே உன் வீடு...!

கோலமிட்டுச் சற்று
தள்ளி நின்று ரசிப்பாய்
நீ நிற்கும் கோலத்தை
என்னவென்று சொல்வது...!

நிறைகுடமும் கூத்தாடும்
நீ சுமந்து வருகையில்..!

உன்னை பார்த்துக்

கொண்டே வந்ததில்
எதிரே இருந்த கல்லில்
இடறி விழப் போன என்னிடம்
பார்த்து வாங்க என்கிறாய்..!


அன்றொருநாள்,
உன் உதட்டிற்குக் கீழே
எனது விரல் கொண்டு
கோடு வரைவதுபோல்
பாவனை செய்தேன்,
என்ன செய்கிறாய் என்றாய்,
கவிதைகள் படித்தால்
பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வைப்பது
என் வழக்கம் என்றேன்,
"சீ"எனச் சொல்லி
கைகளுக்குள் முகம் புதைத்தாயே,
நினைவிருக்கிறதா!

கவிதைகளை தனி வலைப் பக்கத்திற்கு நகர்த்திவிட்டதால் அவ்வப்போது பழைய இடுகை தமிழ்மணத்தில் வலம் வரும் ஏற்கனவே படித்தவர்கள் கண்டு கொள்ள வேண்டாம். :))