Friday, December 25, 2009

மதனோற்சவம்

வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!

Thursday, December 24, 2009

நான் என்பவன்...

”பிழைக்கத் தெரியாதவன்”,
”தான்தோன்றி”,
”சொல் பேச்சுக் கேளாதவன்”,
”மறைகழன்றவன்”
என்றே பலவிதங்களில்
வரையறுக்கப்படும்
நான் யாரெனில்
சிறிது பொறுங்கள்
மழை வரும்போலிருக்கிறது
மழைக்கு முன்பான
பூந்தூறல்களில் நனைவது
நினைக்கிறபோதெல்லாம் கிடைக்காது
நனைந்துவிட்டு வந்துவிடுகிறேன்..!