Thursday, November 22, 2012

மழைநாளின் ரயில் பயணம்

ஜன்னலில் நீர்த் துளிகளின் நடனம்
சட்டென்று நிகழ்ந்து விட்டது
ஒரு கொலையும் ஒரு தற்கொலையும்.
மீண்டும் நடனம்
மீண்டும் கொலை
மீண்டும் தற்கொலை
கண்முன்னே நடந்துகொண்டே இருக்கிறது
கையாளாகதவனாய் நான்.

கிறுக்கல்கள்-9

காணிக்கை
சாமியாடி செல்வராசுவின்மீது,
முனியப்பன் சாமி வந்து
அருள் வாக்கு சொல்கிறபோதெல்லாம்,
சாமி தனக்கு காணிக்கையா கேட்பது மட்டும்
செல்வராசு பொண்டாட்டியின்
அன்றைய தேவையை ஒட்டியே
அமைந்துவிடுகிறது.


ஊர் வாய்
நாலு கழுத வயசாச்சு
ஒரு கல்யாணங்காச்சி பண்ணலாம்னா
கையில காக்காசு துட்டு இல்ல,
வெவசாயமும் படுத்துப் போச்சு,
இதுக்கு மேலயும் தாங்காது சாமின்னுதான்
கேரளாவுல சுவீட்டுக்கடையில 
வேல பாக்குற தெக்கி வீட்டு பால்ராசுப்பய
போன பொங்கலுக்கு வந்தப்போ 
வேல வாங்கி தாறேன்னு சொன்னது 
நெனப்பு வரவும்,
ரவையோட ரவையா 

கெளம்பி ஓடிரலாம்னு
முடிவு பண்ண அன்னைக்கா
பக்கத்துவீட்டு பரிமளம் 

தூக்குல தொங்கணும்.


பிறவி
ஏகம்பா பாட்டிக்கு
82 வயசாச்சாம்,
நட ஒட கொறஞ்சதிலிருந்தே
இப்படித்தான் இந்தத் திண்ணையில குந்தி
ரோட்டுல போற வர சனங்ககிட்ட
பேச்சக் கொடுத்து பொழுத ஓட்டுவா,
கெழவிக்கு வேற வேலையில்லன்னு
முணுமுணுத்துகிட்டே போற சனங்களில்

ஒன்னு ரெண்டு பேராச்சும்
அவளின் நலத்தை விசாரிப்பாக,
அப்பயெல்லாம் கெழவி இப்படித்தான் சொல்லும்,
”ஆயிசுக்கு ஒன்னும் இப்போ பாதகமில்லைனு
கீரத்தூரு சோசியர் சொல்லிப்புட்டாரு,

ஆனா எந்திரிக்க கொள்ள முடியாம இப்படியே
குந்திருக்கதுக்கு  போயி சேரலாம்
என்னத்துக்கு இனிமே ஆயுசு” என்பாள்.
பக்கத்துல போற நாயிக எதுவும்
ஊளையிடுற சத்தம் கேட்டா மட்டும்
வாரி சுருட்டி எந்திரிச்சி
ஊனுகோலுக்கு வச்சிருக்க 

மூங்கிக் கழியக்கொண்டு
நாயப்பார்த்து பெலம் கொண்ட மட்டும் வீசுவா.
சிங்கத்திடமிருந்து தப்பிக்கும்  
மானோட மிரட்சிய
கண்ணுல தேக்கியபடி.

Tuesday, July 24, 2012

கிறுக்கல்கள்-7

புங்கை மரத்தினடியில் 
முந்தைய நாளின் 
பெருமழை வெள்ளம் 
ஓடிய தடங்களில் படிந்திருக்கும் 
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட 
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.

கிறுக்கல்கள்-6

இந்த வீட்டில் ,
முன்பு குடியிருந்தவன்
விட்டுச் சென்ற
சில பொருட்களின் ஊடாக
அவனின் வாழ்கையை
நான் கேளாமலேயே என்னிடம் 
சொல்லிக்கொண்டிருக்கிறான்.

Monday, June 18, 2012

கிறுக்கல்கள்-5

அந்தப் பூங்காவின் நடை பாதையில்
தன் தோழியை செல்போனில்
படம் பிடிக்கும் அவளுக்கு
இடைஞ்சலாய் இருக்குமே என்று
தயங்கி நிற்கிறேன் நான்.

”ம் சீக்கிரம் எடு” என்று
உதடு பிரிக்காமல்
அவசரப்படுத்துகிறாள் தோழி. 

இவளோ ”கொஞ்சம் சிரி,
கொஞ்சம் தலையை சாய்” என்றபடியே
அவளுக்கான பாவனைகளை 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

அவளும் சிரிக்கிறாள்,தலை சாய்க்கிறாள்.
இவளுக்கோ திருப்தியின்றி
மீண்டும் மீண்டும் பாவனைகளைச் சொல்ல
அதுவரை அப்படியேச் செய்தவள்
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு
சட்டென வெட்கத்தோடு 
ஓடி மறைந்துவிட்டாள்.

இவளோ ”ஒழுங்கா போஸ் கொடுக்காம ஓடிட்டா”
என்று தனக்குத் தானே சினுங்கி நிற்கிறாள்.

அவள் ஓரக்கண்ணால்  பார்த்த கணத்தில்
இவள் என்ன செய்துகொண்டிருந்தாளாம்.