Monday, June 18, 2012

கிறுக்கல்கள்-5

அந்தப் பூங்காவின் நடை பாதையில்
தன் தோழியை செல்போனில்
படம் பிடிக்கும் அவளுக்கு
இடைஞ்சலாய் இருக்குமே என்று
தயங்கி நிற்கிறேன் நான்.

”ம் சீக்கிரம் எடு” என்று
உதடு பிரிக்காமல்
அவசரப்படுத்துகிறாள் தோழி. 

இவளோ ”கொஞ்சம் சிரி,
கொஞ்சம் தலையை சாய்” என்றபடியே
அவளுக்கான பாவனைகளை 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

அவளும் சிரிக்கிறாள்,தலை சாய்க்கிறாள்.
இவளுக்கோ திருப்தியின்றி
மீண்டும் மீண்டும் பாவனைகளைச் சொல்ல
அதுவரை அப்படியேச் செய்தவள்
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு
சட்டென வெட்கத்தோடு 
ஓடி மறைந்துவிட்டாள்.

இவளோ ”ஒழுங்கா போஸ் கொடுக்காம ஓடிட்டா”
என்று தனக்குத் தானே சினுங்கி நிற்கிறாள்.

அவள் ஓரக்கண்ணால்  பார்த்த கணத்தில்
இவள் என்ன செய்துகொண்டிருந்தாளாம்.

Monday, April 12, 2010

கிறுக்கல்கள் 3

அழுக்கு ஜன்னல்களுக்கான மவுசு
அலங்கார வாசற்கதவுகளுக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அழகான பெண்களிருக்கும் வீடுகளில்...!

@@@@@@@@@@@@@@@@@@

நடுநிசி தாண்டி நீளும்
அலைபேசி உரையாடல்களில்
அடுத்தென்ன பேசுவதெனப் புரியாது
இடையிடையே நிலவும்
சிலநொடி பெருமௌனங்களிலெல்லாம்
பிறகு பேசலாமென
அழைப்பைத் துண்டிக்க நினைப்பேன்
`அப்புறம் சொல்லுங்க` என்று
மீண்டும் ஆரம்பிப்பாயே
அதில்தானடி ஒளிந்திருக்கிறது
அடர்த்தியாய் நம் காதல்..!

@@@@@@@@@@@@@@@@@@

அலைபேசியில் யாரோடோ
கொஞ்சிப் பேசியபடி வரும்
பின்னிருக்கை வசிகரக்குரலியைத்
திரும்பிப் பார்க்கச் சொல்லி
அடம்பிடிக்கும் மனதை
நாகரிகம் கருதி அடக்குகிறேன்,
தொடர்ந்து கேட்கும்
அக்கொஞ்சல் மொழியில்
தொலையாத ஏதோ ஒன்றைத்
தொலைத்ததாய் தேடும் பாவனையில்
என் நிறுத்தம் வருமுன்
அவளைப் பார்த்துவிட்டே இறங்குகிறேன்
ஜென்மம் ஈடேரியதொரு திருப்தியோடு..!

Friday, December 25, 2009

மதனோற்சவம்

வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!

Thursday, December 24, 2009

நான் என்பவன்...

”பிழைக்கத் தெரியாதவன்”,
”தான்தோன்றி”,
”சொல் பேச்சுக் கேளாதவன்”,
”மறைகழன்றவன்”
என்றே பலவிதங்களில்
வரையறுக்கப்படும்
நான் யாரெனில்
சிறிது பொறுங்கள்
மழை வரும்போலிருக்கிறது
மழைக்கு முன்பான
பூந்தூறல்களில் நனைவது
நினைக்கிறபோதெல்லாம் கிடைக்காது
நனைந்துவிட்டு வந்துவிடுகிறேன்..!

Sunday, November 22, 2009

நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

காயச்சண்டிகையின்
வயிற்றையொத்த
கண்களெனக்கு,
உனை எத்தனை முறை
பார்த்தாலும்
என் கண்களின் பசி
அடங்குவதே இல்லை..!

நீண்டதூரம் ஓடிவந்தவனின்
இதயத்தையொத்துத்
துடிக்கும் என் இதயம்
நீ என்னை கடக்கும் நொடிகளில்..!

குழந்தைகளைக் கண்டால்
குழந்தையாகிக் கொஞ்சுமுன்னை
கொஞ்சச் சொல்லி
கெஞ்சுகிறதென் காதல்..!

Tuesday, October 13, 2009

கிறுக்கல்கள் 2

ஆண் புத்தி, எதார்த்தம் ....
எதேச்சையாய் குனியும்
எதிர் இருக்கை இளமை,
வேறெங்கோ பார்வையைத் திருப்பியும்
விவகாரமாய் உள்விரியும்
அக்காட்சியின் நீட்சிகள்..!

சூழ்நிலையின் தீர்மானங்கள்
நல்லவன்
அயோக்கியன்
குணவான்
முன்கோபி
நண்பன்
துரோகி
அறிவாளி
முட்டாள்
தெய்வம்
சாத்தான்
தைரியசாலி
கோழை
முரடன்
சாது
.....
......

எல்லாமே எல்லோருமே..!

Thursday, October 1, 2009

கிறுக்கல்கள்..

அர்த்தம் புரியாவிட்டாலும்
அழகாய்த்தான் இருக்கின்றன
ஆதர்ஷ கவிஞனின் கவிதையும்
அவளின் சிரிப்பும்..!

***************************
சாலையில் அடிப்பட்ட நாய்மேல்
சகஜமாய் செல்லும் வாகனங்களைப் போல
எதையோப் பார்த்து எதையோக் கேட்டு
எளிதாய் கட்டமைத்து விடுகிறோம்
கொலைச் செயலென்ற பிரஞ்ஞையற்று
அடுத்தவருக்கான பிம்பத்தை...!
******************************

வழக்கமான பேருந்து பயணத்தில்
என்னை ரசிக்கும் அவனின்
இரக்கமற்ற இயல்பான பார்வைக்காகவே
விரும்பியே மறைக்கிறேன் ஊனமான காலை...!