Saturday, April 14, 2018

நிறப்பிரிகை

விடுமுறை நாளொன்றின்
முன் மதிய வேளை.

வீட்டின் எதிரே
வேப்ப மர நிழலில் அமர்ந்து
இலைகளின் இடைவெளியில்  இறங்கும்
வெயிலுக்கு எரிச்சலுற்று
"இந்த வெயிலு வேற " என்று
அலுத்துக் கொண்டே
வீட்டுப் பாடங்களைச்
செய்துகொண்டிருக்கிறாள் சிறுமி.

"பாப்பா , அம்மா இருக்காங்களா ?" என்ற குரல்
வெளிவாசல் பக்கமிருந்து வர
நிமிர்கிறவள்,
காம்பவுண்ட் கிரில் கேட்டினைப் பிடித்தபடி
கறுத்த நிறத்தில்
ஒடிசலான  தேகத்தில்
தலை நரைத்து,  
துருத்திய முன் பற்கள் தெரிய
சிரித்தபடி நின்றுகொண்டிருந்தவளை
அசுவராஸ்யமாய்ப் பார்த்துவிட்டு
 வீட்டை நோக்கி
"அம்மா, யாரோ வந்திருக்காங்க " என்றுவிட்டு
வீட்டுப்பாடத்தைத் தொடர்கிறாள் .

"யாரு" என்றபடியே
வெளியில் வந்த அவளின் அம்மா,
கேட்டினைப் பிடித்தபடி
நின்றிருந்தவளைப் பார்த்ததும்
"மல்லிகாம்மா" என்றபடி
சந்தோஷக் கூச்சலிட்டபடியே
கேட்டினைத் திறக்க ஓடுகிறாள்.

மல்லிகாம்மாவை
அத்துணைப் பிரியமாய் கட்டிக்கொண்டு
அளவளாவியபடி
வீட்டிற்குள் அழைத்துச் செல்வதை
அதே அசுவாரஸ்யத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் சிறுமி .

வீட்டிற்குள் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம்
தாத்தா , பாட்டி , அப்பா என
அனைவரின் குரலிலும்
அம்மாவிடம் இருந்த அதேப் பிரியம்
மல்லிகாம்மாவிடம்
குவிவதன் ஓசைக் கேட்டவள்
எழுந்து மெல்ல வீட்டிற்குள் செல்கிறாள் .

"இவங்கள தெரியுதாடி உனக்கு,
நீ குழந்தையா இருந்தப்போ
இவங்கக் கூடவேதான் இருப்ப,
இவங்கதான் உனக்கு சாப்பாடு ஊட்டணும்,
இவங்கதான் எல்லாமும் செய்யணும்னு
அவ்வளவு அடம் பண்ணுவ "
என்று அம்மா  சொன்னதும் ,
சிறுமியின் முகம் வருடி
திருஷ்டி முறித்த மல்லிகாம்மா ,
"நல்லா வளந்திடுச்சுல்ல" என்று
அதே வெள்ளந்திச் சிரிப்போடு சொன்னதில்
வெட்கம் கொள்கிறச் சிறுமி
மீண்டும் வேப்ப மரம் நோக்கி ஓடி வருகிறாள் .

வீட்டுப்பாடத் தாள் மீது கிடந்த ஸ்கேலில்
அவளுக்கொரு குட்டி வானவில்லை
வரைந்து வைத்திருக்கிறது வெய்யில்,
வானவில்லைக் கண்டு
பெரிதாய் விரிகிற
அவளின் கண்களில் சுரக்கிறது
வெய்யிலின் மீதான முதல் சிநேகம் .